Monday, October 24, 2005

 

எங்கேயோ படித்தது...

சமீப காலமாக ATM குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெவ்வேறு நளிதழ்களில் படித்து வருகிறோம் - குறிப்பாக பெங்களூரில். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்களில் போவோரை அல்லது ஆட்டோவில் போவோரை வழிமறித்து அவர்களை மிரட்டி கையில் சிக்குவதை எடுத்துக்கொள்வதுடன் அவர்களிடம் வங்கி பற்றட்டை (Debit Card) இருப்பின், அவர்களை அருகே இருக்கும் காசாளும் தானியங்கி இயந்திரத்திலிருந்து (ATM- என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?) அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுக்கச் சொல்லி அதனை எடுத்துகொண்டு பறந்துவிடுவதாக கேள்வி. அப்படி அவர்கள் கைகளில் சிக்கியவர்களும் உயிருக்கு பயந்து வேறு வழியின்றி அவர்கள் சொற்படி நடக்கவேண்டியிருக்கிறது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க/தவிற்க ஒரு அருமையான யோசனையை எங்கேயோ படித்திருக்கிறேன். அதாவது, வங்கிகள் பற்றட்டையைக் கொடுக்கும் போது ஒன்றிற்கு பதிலாக இரண்டு நான்கிலக்க திறவுகோல்களை (PINs) கொடுக்கவேண்டியது. அவற்றில் ஒன்று நாம் வழக்கமான உபயோகத்திற்கும் மற்றொன்று மேற்கூறியது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கும். இந்த இரண்டாவது திறவுகோலைப் பயன்படுத்தினால் அந்த காசாளும் இயந்திரம் உடனே வங்கிக்கும் காவல் துறைக்கும் இதைத் தெரிவிப்பதாகவும், எடுக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு சிறிய சங்கேத முத்திரையை பதிக்கின்றார் போலவும் மென்பொருளை அமைத்துவிட்டால் இப்படி குற்றங்கள் புரிபவர்களை சுலபத்தில் பிடித்துவிடமுடியும் என்பதே அந்த யோசனை.

இதனை மேலும் ஆராய்ந்து இத்திட்டத்தில் ஏதேனும் ஓட்டைகளோ சிக்கல்களோ இருப்பின் அவற்றை கண்டறிந்து சரி செய்து வங்கிகள் நடைமுறைப் படுத்தலாம் என்று தோன்றுகிறது. சரி தானே ?

Thursday, June 16, 2005

 

செய்வன திருந்தச் செய்

ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான பாடல்களுக்கு(Rhymes) கொஞ்சமும் பஞ்சம் இல்லை. அப்பாடல்களை நான் இருமுறை கற்க/கேட்க நேர்ந்தது - நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது ஒருமுறையும், தற்போது என் மகன் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும்போது ஒருமுறையும். இதில் ஒரு வித்தியாசம் உண்டு. நான் முதன்முறை கற்றபோது அப்பாடல்களின் மெட்டு மட்டுமே நினைவில் நின்றது. அதன் வரிகளோ பொருளோ நினைவில் அவ்வளவாக இல்லை. தற்போது சில நேரங்களில் அவற்றின் பொருளை சற்றே அசைப் போட்டுப் பார்ப்பது உண்டு.

சில பாடல்கள் சரியெனப் படுகின்றது. இன்னும் சில பாடல்களின் பொருள் குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. அப்பாடல் வரிகளின் உள் அர்த்தமோ அல்லது அப்படி வடிவமைக்கப்பட்டதன் வரலாறோ எனக்குத் தெரியவில்லை. அதனால் என்ன? பெரும்பாலான் இந்தியர்களுக்கும் அது தெரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். பள்ளிகளில் இவற்றிற்கு அர்த்தங்கள் கற்பிப்பதில்லை (நல்லவேளை !)

பெரும்பாலான பாடல்கள் நமக்கு ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்றவை. இவற்றை ஆங்கிலேயர்கள் இன்னமும் நினைவு கூறுகிறார்களோ இல்லையோ நாம் இன்னமும் கற்றுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ( இப்பாடல்கள் தெரியாவிட்டால் ஏதோ ஒரு சமுதாய அந்தஸ்தை இழந்துவிடுவது போல் எண்ணி).

உதாரணமாக, 'Rock A Bye Baby…" என்று துவங்கும் பாடல் ஒரு குழந்தையைத் தாலாட்டும் பாடலாக அமைந்துள்ளது. அதன் பொருளைப் பார்த்தோமானால் - ஒரு மரக்கிளையில் தொட்டில் கட்டி அதில் ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருப்பது போலவும், காற்றடிப்பதால் அந்த தொட்டில் அசைந்தாடி, பின் அக்கிளை உடைந்து தொட்டிலுடன் குழந்தை கீழே விழுவதாகவும் முடிகிறது அப்பாடல். அபத்தமாக இல்லை? நம்மூரில் (அல்லது நாட்டில்) எந்த தாயாவது இப்படி பொருளுள்ள பாடலை தாலாட்டாகப் பாடி தூங்கவைப்பார்களா?

இன்னொரு பாடல் 'Georgie Porgie…' எனத் துவங்கும் பாடலில், Georgie என்ற சிறுவன் அவனுடன் விளையாட வரும் சிறுமிகளுக்கு முத்தம் கொடுத்து அழவைப்பதாகவும், மற்ற சிறுவர்கள் வெளியே விளையாட வரும் போது இச்சிறுவன் ஓடி ஒளிவதாகவும் அமைந்துள்ளது. இது நம் கலாச்சாரத்திற்கு ஒற்று வருகிறதா?

ஏன் இப்படிப்பட்ட பாடல்களை நாம் இன்னமும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? இப்போதுள்ள குழந்தைகள் எல்லாவற்றுக்கும் அர்த்தம் கேட்கின்றனர். நான் பயின்ற காலத்தில் இதுபோன்ற பாடல்கள் இருந்தது கூட தெரியாது.

இந்தியாவில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள் நிறைய உண்டு. அவர்களைக் கொண்டு நம் நாட்டிற்கு ஏற்ப சில குழந்தை பாடல்களை எழுதி அவற்றை ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்ட பள்ளிகளில் பயிற்றுவித்தால் நன்றாக இருக்குமே!

தமிழ் பாடல்களில் நான் அறிந்தவரை முரண்பாடுகள் எதுவும் இருப்பதாக் தெரியவில்லை. நான் ஆங்கில மொழியின் எதிரி அல்ல. உலகமயமாக்கத்தில் ஆங்கிலத்திற்கு பெரும்பங்குண்டு என அறிவேன். நான் சொல்வதெல்லாம் இது தான் - செய்வன திருந்தச் செய்.

( Rhymes என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள். தெரிந்துக்கொள்கிறேன்)

Wednesday, June 15, 2005

 

பிள்ளையார் சுழி


அனைவருக்கும் வணக்கம்.

அட! நானும் கூட ஒரு வலைப்பதிவை தொடங்கிவிட்டேன். இனி நானும் எனது கருத்துக்களைத் தெரிவிக்கலாம், சக வலைப்பதிவாளர்களின் கருத்துக்களையும் அறியலாம். அதுவும் தமிழில்! ஆகா! நினைத்தாலே இனிக்கிறது. ஏதோ என் சினேகிதன் கண்ணன் கொடுத்த ஊக்கத்தில் இந்த வலைப்பதிவை தொடங்கிவிட்டேன். ஆனால், சத்தியமாக என்னவெல்லாம் எழுதலாம், எந்த விஷ(ட)யத்தைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்றெல்லாம் நினைத்தும் பார்க்கவில்லை திட்டமிடவுமில்லை (இப்போதைக்கு யாராவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்தால் தான் உண்டு).

அடேங்கப்பா! ஒரு பத்தி எழுதிவிட்டேனா ! ... சரி, முதல் பதிப்பிற்கு இவ்வளவு போதுமே.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது